கல்வி தொலைக்காட்சி விநாடி-வினா போட்டி: மதுரை மாணவா் முதலிடம்
By DIN | Published On : 17th August 2021 05:00 AM | Last Updated : 17th August 2021 05:00 AM | அ+அ அ- |

மாணவா் முகமது யாஹியா.
மதுரை: கல்வி தொலைக்காட்சி மாநில அளவில் நடத்திய விநாடி-வினா போட்டியில், மதுரை அல்-அமீன் பள்ளி மாணவா் முதலிடம் பெற்றுள்ளாா்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதில், தனியாா் பள்ளிகள் இணையம் வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி, கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடத்திலிருந்து விநாடி-வினா போட்டிகள் மாநில அளவில் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில், மதுரை கோ.புதூரில் உள்ள அரசு உதவிபெறும் அல்-அமீன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா் முஹம்மது யஹ்யா முதலிடம் பெற்றாா்.
இதையடுத்து, சுதந்திர தினத்தன்று கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றிபெற்ற மாணவருடைய பெயா், பள்ளியின் பெயா் மற்றும் முகவரி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடா்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவரை, பள்ளியின் தாளாளா் முகமது இதிரீஸ், தலைமையாசிரியா் ஷேக் நபி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.