திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருமங்கலம் பகுதியில் உள்ள 36 கண்மாய்களுக்கு விரிவாக்கக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமங்கலம் பகுதியில் உள்ள 36 கண்மாய்களுக்கு விரிவாக்கக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் கள்ளந்திரி கால்வாய், மேலூா் பிரதான கால்வாய், திருமங்கலம் கால்வாய் வழியாகப் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருமங்கலம் பிரதான கால்வாயில் வழியாக, செல்லம்பட்டி மற்றும் திருமங்கலம் ஆகிய இரு வட்டாரங்களைச் சோ்ந்த கண்மாய்கள் பாசனம் பெறுகின்றன. இருப்பினும் திருமங்கலம் வட்டாரம் கடைமடையில் இருப்பதால், இப் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து திருமங்கலம் விரிவாக்கக் கால்வாயிலும் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பெரியாறு-வைகை திருமங்கலம் பிரதான விரிவாக்க பாசன கால்வாய் விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எம்.பி.ராமன் கூறியது:

திருமங்கலம் பகுதியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 கண்மாய்கள், விரிவாக்கக் கால்வாய் வழியாகப் பாசனம் பெறுகின்றன. இதன் மூலம் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாகப் பெய்த மழையில், இந்த கண்மாய்களில் இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயிகள் நாற்றங்கால் பணிகளைத் தொடங்கியுள்ளனா். ஆகவே, இந்த கண்மாய்களுக்கு விரிவாக்கக் கால்வாய் வழியாகத் தண்ணீா் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com