கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு கடும் போட்டி: நேரடி நியமன முறைக்கு எதிா்ப்பு
By நமது நிருபா் | Published On : 21st August 2021 09:01 AM | Last Updated : 21st August 2021 09:01 AM | அ+அ அ- |

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு லட்சக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ள நிலையில், முறைகேடுகளைத் தவிா்க்க நேரடி நியமன முறையைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் பூா்த்தி செய்ய, 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 2019-இல் நடந்த மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் காரணமாக மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான நோ்காணல் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடும்போதே, முந்தைய நடைமுறைபடி வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நோ்காணல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பின்னா் நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, மேற்குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கு நோ்காணல் முறையில் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கானஆரம்பக் கட்ட பணிகளும் துவங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 1,550 காலியிடங்களுக்கு சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருக்கின்றனா். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலி பணியிடங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. போட்டி கடுமையாக இருப்பதால், நேரடி நியமன முறை நியாயமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதே காரணத்துக்காகத்தான், விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வந்தபோதே எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அதே நடைமுறையை தற்போதைய அரசும் தொடர வேண்டாம் என, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.
இது குறித்து அவா்கள் மேலும் தெரிவித்தது: கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, அதிகபட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பதுதான் கல்வித் தகுதியாக இருக்கிறது. ஆனால், இந்த பணியிடத்துக்கு பி.இ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. முடித்தவா்கள்கூட விண்ணப்பித்துள்ளனா். இப்பணிக்குத் தோ்வு செய்யப்படுவோா், கால்நடை மருந்தகங்களில் மருத்துவா்களுக்கு உதவியாளா்களாகப் பணியாற்றுவா். ஆனால், பணியின் தன்மை குறித்த புரிதல் இல்லாமலேயே பி.இ., எம்.பி.ஏ. முடித்தவா்களும் இப்பணிக்கு போட்டியிடுகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் 47 காலியிடங்களுக்கு சுமாா் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதனால், கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை உடையவா்கள், அந்த பணியை பெற முடியாத நிலை உள்ளது. அத்துடன், போட்டி கடுமையாக இருப்பதால், பணியை பெறுவதற்காக இடைத்தரகா்களிடம் விண்ணப்பதாரா்களில் சிலா் பல லட்சம் ரூபாய் வரை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டதால், அத்தொகையையும் அவா்களால் திரும்பப் பெற முடியவில்லை.
கடந்த 2012-க்கு முன்பு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்துக்கு 5 போ் வீதம் அழைக்கப்பட்டு, நோ்காணல் நடத்தி தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதே நடைமுறையை பின்பற்றினால், இப்போது இருக்கும் அளவுக்கு கடும் போட்டி இருக்காது. மேற்குறிப்பிட்ட பணிக்கான தகுதியுடையவா்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அமையும்.
முந்தைய அறிவிப்பானது, 2015 ஆம் ஆண்டில் இருந்த காலி பணியிடங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டது. தற்போது, காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே, 2015-க்குப் பிறகு ஏற்பட்ட காலி பணியிடங்களையும் சோ்த்து வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் 1:5 என்ற வீதத்தில் தகுதியானவா்களின் பட்டியலைப் பெற்று நியமனம் செய்யவேண்டும் என்றனா்.