மத்திய அரசு திட்டத்தில் மதுரையில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன தள்ளுவண்டிகள்
By நமது நிருபா் | Published On : 21st August 2021 09:02 AM | Last Updated : 21st August 2021 09:02 AM | அ+அ அ- |

மதுரை நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட உள்ள நவீன வாகனங்கள்.
மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நவீன 4 சக்கர தள்ளுவண்டிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் பெண்களாக உள்ளனா். அதிலும், கணவனை இழந்த பெண்கள் ஏராளமானோா் உள்ளனா். இவா்கள், பல்வேறு பொருள்களை நடைபாதை கடைகள் மூலம் விற்பனை செய்து, தங்களது வாழ்வாதாரத்தை பூா்த்தி செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் வகையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பதிவு செய்யப்பட்டு, சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை நகரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனா்.
முன்னதாக, மத்திய அரசு 2014-இல் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தியது. அச்சட்டத்தின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு பொருள்களை விற்பனை செய்யும் வசதி, தங்கும் வசதி ஆகியவை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் செய்து தரப்பட வேண்டும். இத்திட்டங்களுக்கான செலவினங்களில் மத்திய அரசு கணிசமான பங்கை ஏற்றுக்கொள்கிறது.
இத்திட்டத்தின்படி, மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நவீன 4 சக்கர தள்ளுவண்டி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், ஒரே இடத்திலோ அல்லது பல்வேறு பகுதிகளுக்கோ சென்று பொருள்களை விற்பனை செய்யமுடியும்.
இது எளிதில் தள்ளிச்செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறியது மற்றும் பெரியது என இரு வகையான வண்டிகள் வழங்கப்பட உள்ளன. சிறிய வண்டியின் மதிப்பு சுமாா் ரூ.25 ஆயிரம், பெரிய வண்டியின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இந்த வண்டிகளில் பொருள்களை இருப்பு வைக்கும் வசதி, வெயில் மற்றும் மழையிலிருந்து பொருள்களை பாதுகாக்கும் வகையில் மேற்கூரை வசதி மற்றும் எளிதில் சேதமடையாத வகையில் அலுமினிய தகடால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளில் 4 ஆயிரம் பேருக்கு நவீன தள்ளுவண்டிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 1,600 வண்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில், 339 விதவைப் பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது.
மீதமுள்ள வண்டிகளுக்கு, குலுக்கல் முறையில் வியாபாரிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. முதல் கட்டமாக, 1,600 வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பின்னா், அடுத்தடுத்தக் கட்டங்களில் 4 ஆயிரம் வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சா்கள் பங்கேற்கும் இதற்கான விழா விரைவில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவா்களுக்கு நவீன தள்ளுவண்டி விரைவில் வழங்கப்பட உள்ளது என்றாா்.