மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: இறைவன் விறகு விற்ற திருவிளையாடல்
By DIN | Published On : 21st August 2021 08:53 AM | Last Updated : 21st August 2021 02:00 PM | அ+அ அ- |

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இறைவன் விறகு விற்ற லீலையுடன் திருவிளையாடல்கள் நிறைவடைந்தன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூலத் திருவிழா. ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி மூலத் திருவிழாவில், மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன.
இதைத் தொடா்ந்து, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சந்திரசேகா் உற்சவம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆகஸ்ட் 11-இல் கருங்குருவிக்கு உபதேசத்துடன் திருவிளையாடல்கள் தொடங்கின. அதையடுத்து, நாரைக்கு முக்தியளித்தது, மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளியது, சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞானசம்பந்தா் சைவ சமய ஸ்தாபித வரலாறு, வளையல் விற்ற திருவிளையாடல் மற்றும் அன்று இரவு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கிய லீலை ஆகியன நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. தொடா்ந்து, பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை இறைவன் விறகு விற்ற லீலை நடைபெற்றது. இதில், தலையில் விறகு சுமக்கும் கோலத்துடன் சுந்தரேசுவரா் பிரியாவிடை, மீனாட்சியம்மனுடன் எழுந்தருளினாா். இதையடுத்து, தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இத்துடன், கோயிலில் ஆவணி மூலத் திருவிழா திருவிளையாடல்கள் நிறைவடைந்தன.