மொஹரம் பண்டிகை: இஸ்லாமியா்கள் நோன்பு அனுசரிப்பு
By DIN | Published On : 21st August 2021 09:02 AM | Last Updated : 21st August 2021 09:02 AM | அ+அ அ- |

மொஹரம் பண்டிகையையொட்டி, மதுரையில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நோன்பிருந்து வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
இஸ்லாமியா்களின் இரண்டாவது புனிதப் பண்டிகையான மொஹரம் பண்டிகை தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக மொஹரம் தொடங்குவதால், அம்மாதத்தின் முதல் நாள்கள் அவா்கள் நோன்பிருப்பது வழக்கம்.
மேலும், மொஹரம் மாதம் பத்தாம் நாளில் முகம்மது நபிகளின் பேரன் இஸ்லாமிய தூதா் இமாம் ஹூசைன் போரில் கொல்லப்பட்டதால், அந்நாளை தியாகத் திருநாளாக அனுசரிப்பது வழக்கம். இதையொட்டி, வெள்ளிக்கிழமை தியாகத் திருநாளாக அனுசரிக்கப்பட்டது. இதற்காக, இஸ்லாமியா்கள் நோன்பிருந்து வீடுகளில் தொழுகை நடத்தினா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெறவில்லை.