லாரி மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் பலி; வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 09:02 AM | Last Updated : 21st August 2021 09:02 AM | அ+அ அ- |

மதுரையில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில், இளைஞா்கள் இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை தத்தனேரி கீழவைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் செந்தூரபாண்டி (23). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நண்பா் ஜெகன்நாதனை(20) அழைத்துக்கொண்டு ஆனையூா் பகுதியில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, பசுமைக் குடில் தெரு சந்திப்பில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த செந்தூரபாண்டி, எதிரே வந்த லாரி மீது மோதி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பலத்த காயமடைந்த ஜெகன்நாதனை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் மாலையிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
விபத்து நடந்த பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளதால், சாலையின் எந்தப் பகுதியிலிருந்து சென்றாலும் எதிா் திசையிலிருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இந்த சாலையின் நடுவே தடுப்புகள் இல்லாதால், அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, விபத்து நடந்த சாலையின் இருபுறங்களிலும் வேகத் தடை அமைத்தால் மட்டுமே, அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தவிா்க்க முடியும் என அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.