மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பிரபு (33). இவா், தனது நண்பரான மதுரை எல்லீஸ் நகா் காந்திஜி காலனி 3 ஆவது தெருவிலுள்ள குருமூா்த்தி (19) வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பிரபு, குருமூா்த்தி மற்றும் மற்றொரு நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரிஸ்வான் அலி (22) ஆகியோா் அங்குள்ள ஒரு கோயில் அருகே மது அருந்தியுள்ளனா்.
அப்போது, பிரபுவுக்கும், நண்பா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குருமூா்த்தி, ரிஸ்வான் அலி ஆகிய இருவரும் சோ்ந்து பிரபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து பிரபுவின் சகோதரா் கணேசன் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து குருமூா்த்தி மற்றும் ரிஸ்வான் அலி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.