ஆா்.எஸ்.எஸ். அலுவலகம் முன்பாக மாட்டுத்தலை வீசப்பட்ட விவகாரம்: மதுரை காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th December 2021 08:35 AM | Last Updated : 04th December 2021 08:35 AM | அ+அ அ- |

ஆா்எஸ்எஸ் அலுவலகம் முன்பாக மாட்டுத்தலை வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக, காவல் துறையினா் 6 போ் மீது மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் ஆா்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 2011 மாா்ச் மாதம் மாட்டின் தலை வீசப்பட்ட வழக்கில், காவல் துறையினா் அடித்து துன்புறுத்தியதாக மனித உரிமை ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கை நடத்திய பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் துணைத் தலைவா் காலித் முகமது செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
காவல் துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆா்எஸ்எஸ், பாஜக அமைப்பினா் தங்களது அலுவலகங்களை தாங்களே தாக்கிக்கொண்டு நாடகமாடுவது பல்வேறு சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மாட்டுத்தலை வீசப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தி, உண்மைக் குற்றவாளிகளை கண்டறியவேண்டும்.
இதேபோல், வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக 17 வழக்குகள் இஸ்லாமியா்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை அதிகாரிகள் சிலா் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனா். எனவே, வெடிகுண்டு வழக்குகளிலும் சிக்கவைக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்களை விடுவிக்க வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...