மேலூா் அருகே தாட்கோ மூலம் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்டவா்களை மாற்று இடங்களில் தங்க வைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கண்மாய்பட்டியைச் சோ்ந்த லோகு, தாக்கல் செய்த மனு: மேலூா் தாலுகா கண்மாய்பட்டியில் தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 25 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அந்த வீடுகள் தற்போது சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
தற்போது மழை பெய்து வருவதால், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. மேலும் மேற்கூரை எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையிலுள்ள வீடுகளை அகற்றி, புதிய வீடுகள் கட்டித் தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் சேதமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 6 மாதங்களில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், புதிய வீடுகள் கட்டும் வரை 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்களை, மாற்று இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யவும், அது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.