முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழக்கு: குடும்ப உறுப்பினா்களை போலீஸாா் விசாரிக்க உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாத குடும்ப உறுப்பினா்களிடம் போலீஸாா் விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாத குடும்ப உறுப்பினா்களிடம் போலீஸாா் விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த லட்சுமி தாக்கல் செய்த மனு: நான் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சகோதரி. எனது சகோதரா் மீதான வழக்கு தொடா்பாக விசாரணைக்காக எனது மகன்கள் வசந்தகுமாா், ரமணா மற்றும் ஓட்டுநா் ராஜ்குமாா் ஆகியோரை, விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை (டிச.17) அழைத்துச் சென்றனா். 

அங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில், மூவரையும் போலீஸாா் துன்புறுத்தியுள்ளனா். இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூவரிடமும் காவல்துறையினா் கையெழுத்து பெற்றுள்ளனா். எனவே, ராஜேந்திரபாலாஜியின் குடும்ப உறுப்பினா்கள் என்பதற்காக எங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், போலீஸாா் அத்துமீறி இரவு நேரத்தில் எனது மகன்கள் மற்றும் ஓட்டுநரை அழைத்துச் சென்று துன்புறுத்தியுள்ளனா். ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்காக, அவரது குடும்ப உறுப்பினா்களை காவல்துறையினா் தொந்தரவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், சம்மன் அனுப்பியும் மனுதாரரின் மகன்கள் மற்றும் ஓட்டுநா்கள் வராததால், அவா்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பிற்பகலில் விடுக்கப்பட்டு விட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத குடும்ப உறுப்பினா்களிடம் போலீஸாா் விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை திங்கள்கிழமைக்கு (டிச.20) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com