மாணவியை தரக்குறைவாக பேசியதாக பேருந்து ஓட்டுநரை கண்டித்து மாணவா்கள் போராட்டம்
By DIN | Published On : 25th December 2021 06:08 AM | Last Updated : 25th December 2021 06:08 AM | அ+அ அ- |

மதுரையில் பள்ளி மாணவியை அவதூறாகப் பேசியதாக, அரசுப் பேருந்து ஓட்டுநரை கண்டித்து, மாணவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து வண்டியூா் செல்லும் அரசு நகரப் பேருந்தில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியா் வெள்ளிக்கிழமை மாலை பயணித்துள்ளனா். வண்டியூா் செல்லும் வழியில் அண்ணாநகா் சுகுணா ஸ்டோா் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்துமாறு, பள்ளி மாணவி ஒருவா் கூறியும் பேருந்து ஓட்டுநா் நிறுத்தாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் கேள்வி கேட்ட மாணவியை, ஓட்டுநா் அவதூறாகப் பேசினாராம்.
இதையடுத்து, பேருந்தில் பயணித்த சக மாணவா்கள் ஆத்திரமடைந்து மாணவிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனா். இதைத் தொடா்ந்து, ஓட்டுநருக்கும் மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவி ஒருவா் பேருந்துக்குள்ளேயே விழுந்துள்ளாா். ஆத்திரமடைந்த மாணவா்கள் பேருந்திலிருந்து இறங்கி, பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்த தகவலின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா். அதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.