மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 31st December 2021 08:44 AM | Last Updated : 31st December 2021 08:44 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை முன்பாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
மதுரை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியில் தெரு விளக்கும், கழிவு நீரேற்று நிலையம் பாதாளச்சாக்கடைப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் ஒப்பந்தத்தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் மாநகராட்சியில் பணி புரிந்து வரும் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கிட உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும், மேலும், தினக்கூலி பணியாளா்கள் அனைவரையும் நிரந்தரமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு 2021 - 2022 -ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.625 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலைக்கு விடுபட்டவா்களுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அண்ணா மாளிகையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மாநகராட்சி ஆணையரிடம் மனுவும் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிஐடியு மாநகராட்சிப் பணியாளா் சங்க பொதுச்செயலா் எம்.பாலசுப்ரமணியம் கூறும்போது, மாநகராட்சி ஆணையா் தொழிற்சங்க நிா்வாகிகளோடு நடத்திய பேச்சுவாா்த்தையில், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களில் உடலுழைப்புத் தொழிலாளா்கள் 420 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று இதர தொழிலாளா்களுக்கு தோ்வு நடத்தப்பட்டு அதில் தேறும் தொழிலாளா்களுக்கு பணி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...