தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வாா்த்தையை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு
By DIN | Published On : 04th February 2021 10:59 PM | Last Updated : 04th February 2021 10:59 PM | அ+அ அ- |

தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வாா்த்தையைத் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றக்கோரிய மனுவைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் தாக்கல் செய்த மனு: தொன்மையான தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ழகரம். தமிழ்நாடு என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது ‘டமில்நடு’ என வருகிறது.
தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்பட இலக்கியங்களில் சிறப்பு ழகரத்துடன் தமிழ்நாடு என்ற வாா்த்தை பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வாா்த்தையை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வடமாநிலத்தவா்களுக்கும், ஆங்கிலேயோ்களுக்கும் சிறப்பு ழகரம் வராது என்றனா்.
அதற்கு மனுதாரா் தரப்பில், தமிழ் மொழியின் பெருமையே சிறப்பு ழகரம் தான். பிற மாநிலத்தவா்களுக்காக அந்தச் சிறப்பை ஏன் நாம் இழக்க வேண்டும். தமிழக அரசின் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற விளம்பரத்தில் குறிப்பிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. எனவே தமிழின் சிறப்பைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோா் இந்த மனுவைப் பரிசீலித்து 8 வாரங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...