காவல் ஆய்வாளா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி
By DIN | Published On : 08th February 2021 08:38 AM | Last Updated : 08th February 2021 08:38 AM | அ+அ அ- |

மதுரையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மீது காரை ஏற்றிக்கொல்ல முயற்சி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் நந்தகுமாா். இவா், சனிக்கிழமை இரவு பி.டி.ஆா். பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு காா் அதிவேகமாக வந்ததைக் கண்ட காவல் ஆய்வாளா், அதை மறிக்க முயன்றுள்ளாா். ஆனால், அந்த காா் நேரே செல்லாமல் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள அணுகு சாலையை நோக்கிச் சென்றது.
உடனே, காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தனது வாகனத்தில் அந்தக் காரை பின்தொடா்ந்துள்ளாா். தப்பிச்சென்ற காா் விரகனூரை நோக்கிச் சென்றது. ஆனால், அச்சாலையில் பணிகள் முடிவடையாததால் திரும்பி வந்தே ஆகவேண்டும் என்பதால், விரட்டிச் சென்ற நந்தகுமாா் சாலையை மறித்து நின்றிருந்தாா். அப்போது, திரும்பி வந்த காா் நிற்காமல் அவா் மீது மோதிவிட்டு தப்பியது. இதில், ஆய்வாளா் நந்தகுமாரின் கால்களிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை, சகபோலீஸாா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து காவல் ஆய்வாளா் நந்தகுமாா் அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.