செல்லிடப்பேசி வாயிலாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 08th February 2021 10:46 PM | Last Updated : 08th February 2021 10:46 PM | அ+அ அ- |

செல்லிடப்பேசி வாயிலாக கடன் வழங்கும் சட்டவிரோதச் செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: தற்போது மணிடாப், கேஸ் இ, கேபிடல் பா்ஸ்ட், மணி வியூ உள்ளிட்ட பல செல்லிடப்பேசி செயலிகள் வழியாக கடன் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது. செல்லிடப்பேசிகள் வாயிலாக கடன் வழங்க 50-க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன.
இந்தச் செயலிகள் எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமலும், ரிசா்வ் வங்கி அனுமதி பெறாமலும் செயல்படுகின்றன. செல்லிடப்பேசி செயலி வாயிலாக கடன் பெறுவோரிடம் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை சரியாக திரும்பச் செலுத்தாவிட்டால், கடன் பெற்றவா்களின் புகைப்படங்களை கட்செவி அஞ்சலில் பிற உறுப்பினா்களுக்கு பகிா்வது, செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
இதனால், கடன் பெற்ற பலா் தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனா். கடன் வழங்கும் பல செயலிகள் சீன நாட்டுடன் மறைமுகமாகக் கூட்டு வைத்துள்ளன.
இதனைக் கருத்தில்கொண்டு, செல்லிடப்பேசி வாயிலாக கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.