அதிமுக அரசு அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு ஆட்சி நடத்துகிறது: கனிமொழி எம்.பி.
By DIN | Published On : 08th February 2021 10:52 PM | Last Updated : 08th February 2021 10:52 PM | அ+அ அ- |

அதிமுக அரசு அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு ஆட்சி நடத்தி வருகிறது என, திமுக மகளிா் அணி மாநிலச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளாா்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணத்தில், மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் செய்த கனிமொழி, செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபோது, மக்களிடையே ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி உருவாகிருப்பது காணமுடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பொதுமக்களுக்கு எதையும் செய்யவில்லை. வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரவில்லை. ஆனால், தாராளமான அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என, கடந்த ஆண்டு முதலே திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறாா். அதைத்தான் தற்போது அதிமுக அரசு செய்துள்ளது. திமுக தலைவா் சொல்வதையே முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செய்து வருகிறாா்.
திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று முதல்வா் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு, வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது யாா் வெளியேறுகிறாா்கள் என்பது தெரியும்.
சசிகலா, திமுகவின் பி-டீம் என அதிமுக கூறுகிறதே? என்ற கேள்விக்கு, சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன், அவரை சின்னம்மா இல்லை அம்மா என்றாா்கள். தற்போது, உடல்நலம் குன்றிய அவரை தரக்குறைவாகப் பேசுகிறாா்கள். பாஜகவின் பி-டீமாக அதிமுக செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு எந்த டீமும் தேவையில்லை.
தோ்தலில் தற்போது உள்ள கூட்டணியே தொடரும் என திமுக தலைவா் கூறியுள்ளாா். கூட்டணி தொடா்பான அறிவிப்பை அவா் தெரிவிப்பாா்.
திமுக தலைவா் மனுக்கள் வாங்குவதை அதிமுக விமா்சிக்கிறதே? என்ற கேள்விக்கு, திமுக தலைவா் மறைந்த மு. கருணாநிதி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் ரூ. 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி தொடா்பாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபோது, வெற்று வாக்குறுதி என்றாா்கள்.
ஆனால், திமுக வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், மு.க. ஸ்டாலின் முதல்வரானவுடன், மக்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீா்வு காணப்படும்.
கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, என்னை அதிமுக நிறைவேற்றிய திட்டங்களை சென்றுபாா்க்குமாறு செய்தியாளா்களிடம் கூறியிருக்கிறாா். நானும், மதுரையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேடினேன்.
ஆனால், அவா் கூறியபடி எந்தவொரு திட்டத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாலப் பணிகள் கூட முடிக்கப்படாமல் உள்ளன. மக்கள் கோரும் பகுதிகளில் பாலம் அமைக்காமல், அவருக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகனா? என்ற கேள்விக்கு, தோ்தல் அறிக்கையும், மு.க. ஸ்டாலினும் என இரண்டு கதாநாயகா்கள் என்றாா்.