மதுரையில் 6 ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியா் சங்கத்தினா் 39 போ் கைது

மதுரையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் 39 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் 39 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், கிராமப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மதுரை திருவள்ளுவா் சிலை பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் அ. பாலாஜி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க புகா் மாவட்டச் செயலா் அ. தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் மு. ராம்தாஸ் விளக்கவுரையாற்றினாா்.

மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 39 பேரை, போலீஸாா் கைது செய்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து, அரசு ஊழியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com