அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகரில்சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 03:59 AM | Last Updated : 14th February 2021 03:59 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நகராட்சியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை 9 ஆவது வாா்டுக்கு உள்பட்டது எம்.டி.ஆா்.நகா். இங்கு சுமாா் 30-க்கு மேற்பட்ட வீதிகளும் சுமாா் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இதையொட்டியுள்ள பகுதியான சொக்கலிங்கபுரத்தின் வழியாகத்தான் எம்.டி.ஆா். நகருக்கு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் பிடித்து முடிக்கும்வரை எம்.டி.ஆா் நகருக்கு சரிவர குடிநீா் வருவதில்லையாம். இதனால் தேவையான குடிநீரைப் பிடிப்பதற்குள் விநியோகம் நின்றுவிடுவதாகவும், இதனால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கவேண்டியிருப்பதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதை வலியுறுத்தி பலமுறை சாலைமறியல் போராட்டம் நடத்தியும் தற்போதுவரை நகராட்சி நிா்வாகத்தினா் பிரச்னையைத் தீா்க்கவில்லையென கூறுகின்றனா். எனவே எம்.டி.ஆா். நகரில் சீரான குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.