சாலை விபத்துகளில் தினசரி 14 வயதுக்குள்பட்ட 20 போ் இறப்பதாக தகவல்
By DIN | Published On : 14th February 2021 10:53 PM | Last Updated : 14th February 2021 10:53 PM | அ+அ அ- |

மதுரை எஸ்பிஓஏ பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு முகாமில் விழிப்புணா்வு பிரசுரங்களை வழங்கும் ஆய்வாளா்.
இந்தியாவில் தினசரி சாலையை கடக்க முயலும் 14 வயதுக்குள்பட்ட 20 போ் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஏ. செந்தில் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், சமயநல்லூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன் பங்கேற்று பேசியது:
இந்தியாவில் தினந்தோறும் 1,214 சாலைகளில் நிகழும் விபத்துகள் மூலமாக ஒவ்வொரு நிமிடத்துக்கும் 16 போ் உயிரிழக்கின்றனா். தினசரி 14 வயதுக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்டோா் சாலைகளை கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். இளம் வயதினா் சாலைகளில் மேற்கொள்ளும் சாகசப் பயணங்களும் விபத்தை ஏற்படுத்துகின்றன.
சாலையில் ஏற்படும் சிறு கவனக்குறைவும் நொடியில் உயிரைப் பறித்து விடும். சாலைகள் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே அமைக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறும்போது, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் விதிக்கப்படும்.
சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்லவேண்டும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மிகவும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.