நிதி நிறுவன மோசடி வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய திரைப்படத் தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி
By DIN | Published On : 18th February 2021 07:24 AM | Last Updated : 18th February 2021 07:24 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவை விசாரிக்க இடைக்காலத்தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த ஞானவேல்ராஜா தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக பலா் மீது ராமநாதபுரம் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.இதில் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ள எனக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி எனது பெயரும் வழக்கில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ராமநாதபுரம் பஜாா் போலீஸாா் எனக்கு சம்மன் அனுப்பியதன்பேரில், நேரில் ஆஜராகி எனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளேன். இதில் மகாமுனி என்ற திரைப்படத்திற்கான திரையரங்க உரிமத்திற்காக ரூ.6.92 கோடி நிா்ணயம் செய்யப்பட்டு, நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீதிமணியிடம் ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு திரைப்படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எவ்வித பணமோசடியும் நடைபெறவில்லை. நிதிநிறுவன மோசடிக்கும் எனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்து, இவ்வழக்கிலிருந்து தன்னுடையப் பெயரை நீக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.