மாட்டுத்தாவணி பழச் சந்தையில் புதிதாக கடைகள் கட்ட தடைகோரி வழக்கு: மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 18th February 2021 07:24 AM | Last Updated : 18th February 2021 07:24 AM | அ+அ அ- |

மதுரை மாட்டுத்தாவணி பழச் சந்தை வாகன நிறுத்தப் பகுதியில் புதிதாக கடைகள் கட்ட பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்ட பழ வியாபாரிகள் சங்கச் செயலா் கந்தையா தாக்கல் செய்த மனு:
மதுரையில் யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த பழக்கடைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டது. இங்கு 240 பழக்கடைகள் உள்ளன. இந்தச் சந்தைக்கு தினமும் 500 வாகனங்கள் பழங்களை ஏற்றவும், இறக்கவும் வந்து செல்கின்றன. பழச்சந்தைக்கு உரிய வாகன நிறுத்துமிடம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் புதிதாக 10 கடைகள் கட்டுவதற்காக மதுரை மாநகராட்சி பிப்ரவரி 10 ஆம் தேதி ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாகன நிறுத்தத்திற்கு போதிய இடமில்லாத நிலையில், புதிதாக கடைகள் கட்டப்பட்டால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாவாா்கள். எனவே மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாட்டுத்தாவணி பழச்சந்தையில் புதிதாக 10 கடைகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடலாம். ஆனால் அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டனா். மேலும் இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.