தமிழகத்தில் அரசியல் சீர்குலைவு செய்ய பாஜக சதி: தொல் திருமாவளவன்
By DIN | Published On : 18th February 2021 06:02 PM | Last Updated : 18th February 2021 06:02 PM | அ+அ அ- |

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் தொல்.திருமாவளவன்.
தமிழகத்தில் அரசியல் சீர்குலைவு நிலை ஏற்படுவதற்கு பாஜக மற்றும் சிலஅமைப்புகள் சதி திட்டம் தீட்டி வருகின்றன என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தமிழகத்தில் அரசியல் சீர்குலைவு நிலை ஏற்படுவதற்கு பாஜக மற்றும் சில அமைப்புகள் சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. குறிப்பாக புதுச்சேரியில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி பாஜக அங்கு காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பல்வேறு மாநிலங்களில் பாஜக செய்யக்கூடிய அரசியல் சூதாட்டத்தை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. பல கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொல்லைபுறம் வழியாக ஆட்சியை கைப்பற்றுவது என்ற அரசியலை பாஜக செய்கிறது. பொதுத்துறை பங்குகள் மற்றும் சொத்துக்களை அதானி, அம்பானி போன்றவர்களுக்கு விற்கும் நிலை உள்ளது. அதனை மத்திய நிதிநிலை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வினாலும், அதிமுகவின் ஊழல் ஆட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆணவக் கொலைகள், சாதிய வன்கொடுமைகள் பெருகி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெரியார் மண் என்று போற்றப்படும் கூடிய சமூக நீதி மண்ணாக இருக்கக்கூடிய தமிழகத்தில் சனாதன சக்திகள் அரசியல் செய்து வருகிறார்கள். இவர்களது செயல்களை தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணி வெளிப்படுத்தும். அதிமுக பாஜகவின் சதி திட்டங்களில் இருந்து முதலில் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் உள்ளது. மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒட்டுமொத்த தேசத்தையே ஒப்படைக்கும் வகையில் செயல்படுகிறது.
சிவகாசியில் பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.