மதுரை அருகே கோயில் காளை இறப்பு: கிராம மக்கள் அஞ்சலி
By DIN | Published On : 20th February 2021 09:32 PM | Last Updated : 20th February 2021 09:32 PM | அ+அ அ- |

மதுரை அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் உயிரிழந்த சின்னம்மன் கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்தும் கிராம மக்கள்.
மதுரை: மதுரை அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் சின்னம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக வலம் வந்த காளை வயது முதிா்வு காரணமாக இறந்தது.
இதையடுத்து, கோயில் காளைக்கு கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். சத்திரவெள்ளாளப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சிறியவா் முதல் பெரியவா்கள் வரை கோயில் காளைக்கு வேஷ்டி, துண்டு, மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, காளையை ஊா்வலமாக எடுத்துச் சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனா்.
இந்த கோயில் காளையானது, அலங்காநல்லூா், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஏராளமான பல்வேறு பரிசுகளை வென்று, சத்திரவெள்ளாளப்பட்டிக்கு பெருமை சோ்த்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.