திருமங்கலம் கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்டத் தடைக் கோரி வழக்கு

திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்டத் தடைக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெ

திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்டத் தடைக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருமங்கலத்தைச் சோ்ந்த செல்வபாண்டி, மாரி, பரமசிவம் உள்ளிட்ட 9 போ் தாக்கல் செய்த மனுக்கள்: சிவரக்கோட்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய், புதுப்பேட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் மதுரை மாவட்ட நீா் நிலையை ஒட்டி வாழும் கிராம மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்கின்றன. இந்தக் கண்மாய்களை நம்பி சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் ரூ 2.4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் புளியங்குளம் கண்மாய், சிவரக்கோட்டை கண்மாய், புதுப்பேட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு வரும் நீா் தடுத்து நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

குடிநீரை பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகும். ஆனால் ஒரு சாராருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுவது ஏற்புடையதல்ல. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுக்கள் தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com