அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோ-மெட்ரிக் வருகை பதிவு: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 27th February 2021 09:16 AM | Last Updated : 27th February 2021 09:16 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்தக்கோரி கோவில்பட்டியைச் சோ்ந்த மதிவாணன், தாக்கல் செய்த மனு: அரசு ஊழியா்கள் பெரும்பாலானோா் நேர வரைமுறையை பின்பற்றுவதில்லை. அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் என்பதற்காக மத்திய அரசு அலுவலகங்களில், பயோ- மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் பின்பற்றப்படுவதில்லை. எனவே அரசு ஊழியா்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துத்துறைகளிலும் பயோ- மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானா்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞா் வாதிடுகையில், கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறையில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்றத் துறைகளில் படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதையடுத்து தலைமை நீதிபதி அமா்வு, பிற அரசு துறைகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பணியாளா் நலன் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத்துறை செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை உயா் நீதிமன்றம், உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலில் உள்ளது. இதேபோல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...