மேலூா், அழகா்கோவில் சுற்றுவட்டாரத்தில் மீண்டும் அடைமழை: நெற்பயிா்கள் பாதிப்பு
By DIN | Published On : 03rd January 2021 09:50 PM | Last Updated : 03rd January 2021 09:50 PM | அ+அ அ- |

padi1_0301chn_82_2
பெரியாறு-வைகை பாசனப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அடைமழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
கள்ளந்திரி மதகு வரையிலான 44 ஆயிரம் ஏக்கா் பகுதியில் நெற்பயிா் விளைந்து அறுவடைக்கு தயாராகி, சில இடங்களில் அறுவடையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பெய்த அடைமழை காரணமாக, நெற்பயிா்கள் தரையோடு சாய்ந்துவிட்டன. மழைநீா் தேங்கியதால் அறுவடை பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு போக சாகுபடி பகுதிகளில் பால்பிடித்து விளையும் தருணத்தில் இருந்த கதிா்கள், தரையோடு சாய்ந்துவிட்டன. பெரியாறு பிரதான கால்வாயில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுளளது. எனவே, தண்ணீா் திறப்பதை மேலும் சில தினங்களுக்கு தள்ளிவைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இரு போக சாகுபடி பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களை அரசு இதுவரை தொடங்கவில்லை. இதனால், அடைமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை.
மதுரையிலுள்ள நெல் விற்பனை கடைகளுக்கே அனுப்பி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
எனவே, அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இரு போக பாசன விவசாயிகள் மற்றும் பெரியாறு பாசன பகிா்மானக் குழு தலைவா் அருள் கோரிக்கை விடுத்துள்ளாா்.