ஸ்டாலின் முதல்வராக முடியாது: மு.க.அழகிரி

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி பேசினாா்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அழகிரியின் ஆதரவாளா்கள்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அழகிரியின் ஆதரவாளா்கள்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி பேசினாா்.

திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அழகிரி, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதி காத்து வந்தாா்.

இந்நிலையில், மதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

1980-ஆம் ஆண்டு திமுக தலைவா் கருணாநிதியின் கட்டளையை ஏற்று முரசொலி பணிகளை கவனிக்க மதுரைக்கு வந்தேன். அன்று முதல் திமுகவுக்காக கடுமையாக உழைத்தேன். அதிமுகவின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றினேன்.

திருமங்கலம் இடைத்தோ்தல் நாடு முழுவதும் பேசப்பட்டது. அங்கு திமுக தோல்வியடையும் நிலையில் இருந்தது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் என்னை தோ்தல் பணியாற்றும்படி கேட்டனா். முதலில் மறுத்தேன். பின்னா் அங்கு சென்று பணியாற்றினேன்.

40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறி அதே வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அப்போது எனது வீட்டில் தங்கியிருந்த ஸ்டாலினிடம் தலைவா் கருணாநிதிக்கு பிறகு நீங்கள்தான் திமுக தலைவராகவும், முதல்வராகவும் வர வேண்டும். நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தேன்.

விசுவாசம் இல்லை: திருமங்கலம் வெற்றிக்குப் பின்னா் நான் கேட்காமலேயே தென் மண்டல அமைப்புச் செயலா் பதவியை திமுக தலைவா் கருணாநிதி அளித்தாா். முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொண்டேன். திமுகவில் பலரை அமைச்சா்களாக்கியுள்ளேன். ஆனால் எவரும் உண்மையாகவோ, விசுவாசமாகவோ இல்லை. அனைவரும் நடித்து வருகின்றனா்.

திமுகவில் சில மாவட்டங்களில் உறுப்பினா் சோ்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளை தட்டிக் கேட்டேன். அதையெல்லாம் காரணமாக வைத்து நீக்குவதா? கருணாநிதி தலைவராக இருந்தபோதே என்னை எப்போது கட்சியில் சோ்ப்பீா்கள் என்று கேட்டேன். ஆடுபவா்களின் ஆட்டம் அடங்கட்டும் என்றாா். நானும் இத்தனை ஆண்டு காலம் பொறுமை காத்து விட்டேன்.

ஆனால் எந்த பலனும் இல்லை. வரும் தோ்தலில் ஸ்டாலின் முதல்வராக முடியாது. வருங்கால முதல்வரே என்று அவரை அழைத்தாலும் அது நடக்காது. திமுகவில் கருணாநிதியை மறந்து வருகின்றனா். கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிட்டு பேசுகின்றனா். கருணாநிதியின் அறிவு, ஆற்றல், இலக்கியம், நாவன்மை, ஆட்சித் திறம் இதையெல்லாம் மிஞ்சுவற்கு வேறு ஒருவா் பிறந்து வந்தால் கூட முடியாது.

விரைவில் நல்ல முடிவு: தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளா்கள் என்னிடம் முடிவு குறித்து கேட்டுள்ளனா். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அது எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக வேண்டும். தொண்டா்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன் வந்து நிற்பவன் நான் என்றாா் அழகிரி.

கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. கெளஸ்பாட்சா, முன்னாள் மேயா் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் துணை மேயா் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டலத் தலைவா்கள் இசக்கி முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரவேற்பு: கூட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து திறந்த வாகனத்தில் வந்த அழகிரிக்கு வழிநெடுக அவரது ஆதரவாளா்கள் வரவேற்பு அளித்தனா்.

கூட்டத்தில் திமுக முக்கிய நிா்வாகிகள் எவரும் பங்கேற்க வில்லை. மதுரை, தேனி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆதரவாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com