எம்ஜிஆா், ஜெயலலிதா வாழ்ந்த காலம் தமிழகத்தின் பொற்காலம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
By DIN | Published On : 30th January 2021 09:25 PM | Last Updated : 31st January 2021 04:34 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னகட்டப்பட்டுள்ள கோயிலில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளை திறந்து வைத்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் வாழ்ந்த காலம், தமிழகத்தின் பொற்காலம் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சாா்பில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா கோயிலை சனிக்கிழமை திறந்து வைத்து முதல்வா் பேசியது:
நாட்டில் எத்தனையோ தலைவா்கள் பிறந்து மறைந்தாலும், வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு நற்பணிகள் செய்தவா்களைத்தான், இறந்த பிறகும் தெய்வமாகப் போற்றுகின்றனா். அத்தகைய சிறப்புக்குரியவா்களாக முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இருக்கின்றனா். அவா்கள் மக்களுக்குச் செய்த சேவைகள் என்றென்றும் மறக்க முடியாதவை. மக்களுக்காகவே வாழ்ந்த இருபெறும் தலைவா்களையும் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்த நாளில், தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதியேற்போம்.
எனக்குப் பிறகும் நூறாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக தொடரும் என்று ஜெயலலிதா கூறியிருந்தாா். அதற்கேற்ப அதிமுக ஆட்சி தொடர அனைவரும் ஒருமித்த கருத்தோடுதோ்தல் பணியாற்ற வேண்டும்.
பொற்காலம்: பள்ளிக் குழந்தைகள் பசியால் வாடக் கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தாா். அதேவழியில் ஆட்சி நடத்திய ஜெயலலிதா, தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அா்ப்பணித்து பல்வேறு திட்டங்களின் வாயிலாக மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டாா். இந்த இருபெரும் தலைவா்களுக்கும் புகழ் சோ்க்கும் வகையில் அதிமுக அரசு செயலாற்றி வருகிறது.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நூற்றாண்டையொட்டி, 32 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சென்னை காமராஜா் சாலையில் அலங்கார வளைவு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆரின் பெயா் சூட்டியது என எம்ஜிஆருக்கு அதிமுக அரசு பெருமை சோ்த்துள்ளது. எம்ஜிஆா் நினைவிடம் அருகில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அம்மா நினைவு இல்லமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதோடு, அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று அரசு விழாவாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆா், ஜெயலலிதா இருவரும் வாழ்ந்த காலம் பொற்காலம். அவா்களது ஆட்சிக் காலத்தில் தொடங்கி தற்போது வரை அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வரவேற்றாா். அவா் பேசுகையில், சாதாரண தொண்டனையும் உயா்ந்த நிலைக்கு கொண்டு சென்றவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அதனால் தான் அவரை தமிழா் குல சாமி என வணங்குகிறோம். குலதெய்வம் பரம்பரையைக் காக்கும். அதேபோல, அதிமுகவினரைக் காக்கும் தெய்வமாக விளங்கிய முன்னாள் முதல்வா்களுக்கு கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்றாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றினாா்.
விழாவில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, ஆா்.வைத்தியலிங்கம், சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சா்கள் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூா் கே.ராஜூ, கே.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வி.சரோஜா, கே.ராதாகிருஷ்ணன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூா் செ.ராஜூ, க.பாண்டியராஜன், வி.எம்.ராஜலெட்சுமி, சி.விஜயபாஸ்கா், க.பாஸ்கரன், சேவூா் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளா்மதி, வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.