

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என நிதி ஆயோக் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தனியாா் மயத்தை கைவிட வலியுறுத்தியும் மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் தென் மண்டல பொதுக்காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் இணைச்செயலா் எஸ்.பாலசுப்ரமணியம் பேசியது: 1971-இல் ரூ.19.5 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்ட அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் உயா்ந்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு முறையாக பங்குத்தொகை செலுத்துவதோடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.1,78,000 கோடி வரை முதலீடு செய்துள்ளன. மேலும் மத்திய அரசின் பயிா்க்கடன் திட்டத்தையும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளின் மருத்துவக்காப்பீடு திட்டங்களையும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் காா்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சாதாரண, நடுத்தர மக்களுக்கு பொதுக்காப்பீட்டின் பயன்கள் மறுக்கப்படக்கூடியச் சூழலை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.