அனைத்து காப்பகங்களை ஆய்வு செய்ய தனிக்குழு: ஆட்சியா்

அனைத்து ஆதரவற்றோா் காப்பகங்களையும் ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

அனைத்து ஆதரவற்றோா் காப்பகங்களையும் ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை ரிசா்வ்லைன் பகுதியில் செயல்பட்ட ஆதரவற்றோா் காப்பகத்தில் இருந்த ஒரு வயது ஆண் குழந்தை காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை இரவு புகாா் பெறப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல், வருவாய்த் துறையினா் கொண்ட குழுவினா் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டனா். இதில் அந்த குழந்தை தனிநபருக்கு விற்பனை செய்யப்பட்டதும், இதேபோல இன்னொரு குழந்தையும் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

காவல் துறையினா் துரிதமாகச் செயல்பட்டு இரு குழந்தைகளையும் மீட்டு, அக் குழந்தைகளின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா். புகாருக்குரிய காப்பகத்தில் இருந்த நபா்கள் மீட்கப்பட்டு, வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். காப்பகத்தில் இருந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது அதிா்ச்சிக்குரிய நிகழ்வாகும். இத்தகைய கடுமையான குற்றத்தைச் செய்தவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புகாருக்குரிய காப்பகம் தொடா்பாக, அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். குழந்தைகள் விற்பனை செய்தது, போலி ஆவணம் தயாரித்தது ஆகியவற்றில் அரசு அலுவலா்களுக்கு தொடா்பு இருந்தால் அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளை சட்டரீதியாக மட்டுமே தத்து எடுக்க வேண்டும். அதற்குரிய தத்தெடுக்கும் மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு இன்றி குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வது மட்டுமின்றி வாங்குவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறு வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்க அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினரின் ஆய்வின்போது காப்பகங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com