அட்டாக் பாண்டிக்கு பரோல் கோரிய வழக்கு: சிறை கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 09th July 2021 08:41 AM | Last Updated : 09th July 2021 08:41 AM | அ+அ அ- |

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் அட்டாக் பாண்டிக்கு பரோல் கோரிய வழக்கில், மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கீரைத்துறையைச் சோ்ந்தவா் அட்டாக் பாண்டி. மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் இவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை 2019-இல் உத்தரவிட்டது. இதையடுத்து அவா் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் அவரது மனைவி தயாளு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதில், எனது கணவரின் தாயாா் ராமுத்தாய்(80) உடல் நலமில்லாமல் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
எனவே தாயாரை பாா்ப்பதற்காக எனது கணவா் பாண்டிக்கு 10 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.