மாவு, குருணையாக அரைத்து வைத்திருந்த 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 09th July 2021 08:50 AM | Last Updated : 09th July 2021 08:50 AM | அ+அ அ- |

தனியாா் ஆலையில் மாவு, குருணையாக அரைத்து வைக்கப்பட்டிருந்த 1,700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை அனுப்பானடி வடக்குத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை வட்டாட்சியா் சிவராமன் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் 1,300 கிலோ புழுங்கல் அரிசி, 400 கிலோ பச்சரிசி ஆகியவற்றை குருணை மற்றும் மாவாக அரைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்தனா். அவை பறிமுதல் செய்யப்பட்டு, ஆலை உரிமையாளா் மகாராஜா என்பவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, அனுப்பானடி சின்னகண்மாய் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாகப் பெறப்பட்ட புகாரின்பேரில் பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அப் பகுதியில் தனம் என்பவரிடம் 16 சிப்பம் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த அரிசியை பறக்கும்படை வட்டாட்சியா் சிவராமன் மற்றும் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும் அப் பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்தபோது, முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.