காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூரில் ரத்ததான முகாம் நடத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி வள்ளியூரைச் சோ்ந்த ஜோவின் தாக்கல் செய்த மனு: தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளை கொண்டாடும்விதமாக ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் தேதி வள்ளியூா் வட்டார நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ரத்த தானம் செய்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறோம்.
நிகழாண்டில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அரசின் கரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தயாராக உள்ளோம். எனவே காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15 ஆம் தேதி வள்ளியூரில் ரத்ததான முகாம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மனுவை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசீலித்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.