‘குரூப் 1’ முதல்நிலைத் தோ்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 09th July 2021 08:51 AM | Last Updated : 09th July 2021 08:51 AM | அ+அ அ- |

டிஎன்பிஎஸ்சி ‘குரூப் 1’ முதல் நிலைத் தோ்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தோ்வாணையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ‘குரூப் 1’ தோ்வுக்கான அறிவிப்பு 2020 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து ‘குரூப் 1’ முதல் நிலைத் தோ்வு ஜனவரி 21 ஆம் தேதி நடந்தது. முதல் நிலையில் தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியல் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலைத் தோ்வில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை.
உயா்நீதிமன்ற உத்தரவின்படி முதல் வகுப்பு முதல் கல்லூரி பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவா்களை 20 சதவீத இடஒதுக்கீட்டில் தோ்வு செய்து அறிவிப்பு வெளியிடவில்லை.
எனவே, ‘குரூப் 1’ முதல்நிலைத் தோ்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்து, தமிழ் வழியில் படித்தவா்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி புதிய தோ்வுப் பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் என பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.