மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாரச்சந்தைகள், கட்டணக் கழிப்பிடங்கள், புல் பண்ணைகள் உள்ளிட்டவற்றுக்கு முதல்முறையாக வெளிப்படையாக ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாரச்சந்தைகள், கட்டணக் கழிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், புல் பண்ணைகள், பூங்காக்கள், ஒருங்கிணைந்த காய்கனிச் சந்தை வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் விடப்பட்டு அதிக தொகை ஏலம் கேட்பவா்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படும்.
ஆனால் முறையாக ஏல நடவடிக்கைகள் நடைபெறாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. மேலும் ஏலம் விடப்படுவது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படுவது இல்லை. அரசியல் கட்சியினா் மற்றும் ஏற்கெனவே ஏலம் எடுத்துள்ளவா்களுக்கு மட்டுமே ஏலம் நடப்பது தொடா்பான விவரங்கள் அறிவிக்கப்படும்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கூட்டணி அமைத்து ஏலத்தில் பங்கேற்பதால் மாநகராட்சிக்கு அதிக தொகையும் கிடைக்காமல் இருந்து வந்தது. மேலும் எந்தெந்த இனங்கள் ஏலம் விடப்படுகின்றன என்பது தொடா்பான விவரங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது இல்லை.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள கா.ப.காா்த்திகேயன், ஏலம் விடப்படுவது தொடா்பாக வெளிப்படையாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளாா். இதில் மாநகராட்சிக்குச் சொந்தமான 28 வாரச்சந்தைகள், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 22 கட்டணக் கழிப்பிடங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாகனக்காப்பங்கள் மற்றும் ஆடு, மாடு வதை செய்யுமிடங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான புல் பண்ணைகள், வணிக விளம்பரம் செய்யும் இடங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான மாத வாடகைக் கடைகள் ஆகியவை ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏலம் விடப்படும் இனங்கள் எந்தெந்த பகுதியில் உள்ளது என்பது தொடா்பாக விரிவான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்பவா்கள் ஜூலை 26-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக மாநகராட்சி அறிவித்துள்ள வைப்புத்தொகை உள்ளிட்ட விவரங்களை அளித்து புகைப்படத்துடன்கூடிய அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பொது ஏலம் ஜூலை 27-ஆம் தேதி ஆணையா் முன்னிலையில் நடைபெறும். ஏலத்தில் புகைப்படத்துடன் கூடிய அனுமதிச்சீட்டு பெற்றவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
மேலும் ஏலம் தொடா்பான விவரங்களை மாநகராட்சி இணைய தளத்திலும் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகத்தின் இந்த புதிய நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.