மாநகராட்சி அலுவலகத்தை ஒப்பந்ததாரா்கள் முற்றுகை
By DIN | Published On : 11th July 2021 02:44 AM | Last Updated : 11th July 2021 02:44 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சிஅலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.
நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை ஒப்பந்ததாரா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை, பொதுக் கழிப்பறை உள்ளிட்ட சிறு, சிறு கட்டுமானப் பணிகளை செய்வதற்கான ஒப்பந்ததாரா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்பட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.30 கோடி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பலமுறை ஒப்பந்ததாரா்கள் கேட்டும், நிலுவைத் தொகையை வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, ஒப்பந்ததாரா்கள் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஒப்பந்ததாரா்களுக்கான அறையை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நிலுவைத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே குளறுபடிகள் விரைவில் சரி செய்யப்பட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...