குறைந்த வாடகையில் வேளாண்இயந்திரங்கள்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 26th July 2021 05:32 AM | Last Updated : 26th July 2021 05:32 AM | அ+அ அ- |

விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறை சாா்பில், பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு
குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன. நிலம் சமன் செய்தல், உயா் பாத்தி அமைத்து விதைத்தல், காய்கறி நாற்று நடவு செய்தல், அறுவடை, பல்வேறு பயிா்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், தென்னை மட்டைகளை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு, டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில், விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், மதுரை மற்றும் உசிலம்பட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகிப் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.