தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்: நிகழாண்டுக்கு ரூ.3.98 கோடி ஒதுக்கீடு
By DIN | Published On : 26th July 2021 05:33 AM | Last Updated : 26th July 2021 05:33 AM | அ+அ அ- |

தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில், மதுரை மாவட்டத்துக்கு நிகழாண்டுக்கு ரூ.3.98 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநா் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் பரப்பளவு விரிவாக்கத்தின் கீழ், 887 ஹெக்டேரில் வீரிய ரக காய்கறிகள், மா அடா் நடவு, கொய்யா அடா் நடவு, பப்பாளி சாகுபடி, உதிரி மலா்கள், கிழங்கு வகை, எலுமிச்சை, அத்தி மற்றும் டிராகன் பழ சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கென ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய மா மர தோட்டங்களை புதுப்பிக்க ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றுக்கு ரூ.22.5 லட்சம், தேனீ வளா்ப்புக்கு ரூ.19.20 லட்சம், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.122.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம்.