வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் 1 லட்சம் தேங்காய்கள் ஏலம்
By DIN | Published On : 09th June 2021 09:44 AM | Last Updated : 09th June 2021 09:44 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து ஆயிரத்து 130 தேங்காய்கள் ஏலத்தில் விற்பனையாகின.
இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மட்டுமன்றி அருகமை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்று வருகின்றனா். இதில் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பலனைடைந்து வருகின்றனா். பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஏலம் நடைபெற்று வருகிறது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 26 விவசாயிகளின் 1லட்சத்து ஆயிரத்து 130 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். 13 வியாபாரிகள் பங்கேற்றனா். வேளாண் விற்பனைக் குழுச் செயலா் மொ்ஸி ஜெயராணி தலைமையில் ஏலம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் ஏலத்தைப் பாா்வையிட்டாா்.
அதிகபட்சமாக ரூ. 16.10-க்கும் குறைந்தபட்சமாக ரூ 9.29-க்கும் தேங்காய் ஏலம் போனது. இதன் மூலம் ரூ.10 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. அதோடு, இரு விவசாயிகளின் 90 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.92-க்கு ஏலம் போனது. இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.