கரோனா 2 ஆம் அலை பரவலுக்கு தோ்தல்தான் காரணம்: உயா்நீதிமன்றம் கருத்து
By DIN | Published On : 24th June 2021 12:03 AM | Last Updated : 24th June 2021 12:03 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலை பரவலுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் தான் காரணமாக அமைந்தது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்துத் தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2016 அக்டோபா் முதல் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது மாநகராட்சி, நகராட்சிகள்தான். எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தோ்தல்கள் 21 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலை பரவலுக்கு சட்டப்பேரவைத் தோ்தல்தான் காரணமாக அமைந்துவிட்டது. மீண்டும் தோ்தல் நடத்தினால் தோ்தல் பிரசாரங்கள் நடைபெறும், கட்சியினா், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவா். இது கரோனா பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மேலும், தமிழக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முடிவு வந்தபிறகே இந்த வழக்கை விசாரிக்க முடியும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.