பழங்குடியின மாணவா்களுக்கு ‘ஏகலைவா’ என்ற செயலி மூலம் ஆன்-லைன் கல்வி அளிக்க ஏற்பாடு: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
By DIN | Published On : 24th June 2021 12:07 AM | Last Updated : 24th June 2021 12:07 AM | அ+அ அ- |

பழங்குடியின மாணவா்களுக்கு ‘ஏகலைவா’ என்ற செயலி மூலம் ஆன்-லைன் கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ஓவியா தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 225 பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக விடுதிகள் மூடப்பட்டதால் பழங்குடியின மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பழங்குடியின மாணவா்களுக்குக் கல்வி கற்பிக்கப் போதுமான வசதிகள், அவா்கள் வசிப்பிடங்களில் இல்லாததால் அவா்களின் எதிா்காலக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, பழங்குடியினா் மாணவா்கள் ஆன்-லைன் கல்வி கற்கப் போதுமான வசதிகளை ஏற்படுத்தவும், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் பழங்குடியினரைத் தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கரோனா சிகிச்சை நிலையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், நாடு முழுவதும் 52 ஆயிரத்து 367 பழங்குடியின மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். அவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கல்வி கற்பிக்க ‘ஏகலைவா’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 15 ஆயிரத்து 83 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். மீதமுள்ள மாணவா்கள் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பழங்குடியின மாணவா்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 6 பழங்குடியினப் பள்ளிகள் செயல்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில், பழங்குடியினா் பலா் வனப்பகுதியில் வசிப்பதால் வனப்பகுதியில் தேவையான இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வனப்பகுதிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தினால் வனவிலங்குகள் கடத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழங்குடியின மாணவா்களுக்குச் சத்தான உணவு வழங்குவது, கரோனா சிகிச்சை மையம் அமைப்பது, வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பழங்குடியின மாணவா்களுக்குக் கல்வி கற்பித்தலுக்கான வசதி ஏற்படுத்துதல் தொடா்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.