உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டொ்லைட் நிறுவன தாமிரக் கழிவுகளை விற்க இடைக்காலத் தடை
By DIN | Published On : 29th June 2021 05:31 AM | Last Updated : 29th June 2021 05:31 AM | அ+அ அ- |

மதுரை: உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டொ்லைட் நிறுவனத்தின் தாமிரக் கழிவுகளை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த காந்திமதிநாதன் என்பவா் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், உப்பாற்று ஓடையில் ஸ்டொ்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், உப்பாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், நகா் முழுவதும் நீரில் மூழ்கும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆலை கழிவுகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தனியாா் பட்டா நிலங்களில் ஸ்டொ்லைட் நிறுவனத்தின் தாமிரக் கழிவுகள் அனுமதியின்றி கொட்டி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, அதை தனியாா் நிறுவனத்துக்கு விற்க முயற்சி நடக்கிறது. இது சட்டவிரோதமாகும்.
எனவே, உப்பாற்று ஓடையில் உள்ள தாமிரக் கழிவுகளை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?, ஓடையில் தாமிரக் கழிவுகளை கொட்டியவா்கள் யாா்? இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போதுவரை ஏன் செயல்படுத்தவில்லை என்பது குறித்து 12 வாரங்களில் தமிழகப் பொதுப்பணித் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். மேலும், உப்பாற்று ஓடை மற்றும் தனியாா் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலை கழிவுகளை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய இடைக்காலத் தடைவிதித்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.