அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
By DIN | Published On : 29th June 2021 05:32 AM | Last Updated : 29th June 2021 05:32 AM | அ+அ அ- |

மதுரை: தமிழகத்தில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து திருச்சியைச் சோ்ந்த சிவா என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களான எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை மிகவும் அதிகமாக உயா்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பலரும் வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா காலத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடிய முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற பொருள்களின் விலை நிா்ணயம் என்பது சம்பந்தப்பட்ட துறையின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட இயலாது. எனவே, மனுதாரா் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.