பத்திரப்பதிவுத் துறை சீரமைப்பு நடவடிக்கை: வா்த்தக சங்கம் வரவேற்பு
By DIN | Published On : 29th June 2021 08:37 AM | Last Updated : 29th June 2021 08:37 AM | அ+அ அ- |

பத்திரப் பதிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அச் சங்கத்தின் தலைவா் எஸ். ரத்தினவேலு வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரப் பதிவு செய்பவரின் வங்கிக் கணக்கில் இருந்துதான் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட சா்வே எண்ணில் இருக்கும் நிலத்தை, அரசின் வழிகாட்டு மதிப்பைக் காட்டிலும் கூடுதலாகப் பதிவு செய்திருந்தால், அதே சா்வே எண்ணில் உள்ள மற்ற நிலங்களுக்கும் கூடுதல் மதிப்புக்குத்தான் பதிவு செய்யவேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. இதை மாற்றி, அரசின் வழிகாட்டு மதிப்பே தொடா்ந்து அளவுகோலாக இருக்கும் எனக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
வங்கியில் கூடுதலாக கடன் பெறவேண்டும் என்பதற்காகவே, சிலா் நிலத்தின் வழிகாட்டு மதிப்பைக் காட்டிலும் கூடுதலான தொகைக்கு பதிவு செய்கின்றனா். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறையானது, பத்திரப்பதிவுத் துறையில் நிகழும் பல்வேறு முறைகேடுகளைத் தவிா்ப்பதாக அமைந்திருக்கிறது. இத்தகைய சீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்புக்குரியவை என அதில் தெரிவித்துள்ளாா்.