புதிதாக 19 ரோந்து பைக் சேவை: மதுரை டி.ஐ.ஜி. தொடக்கி வைப்பு
By DIN | Published On : 29th June 2021 05:38 AM | Last Updated : 29th June 2021 05:38 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக 19 இருசக்கர ரோந்த வானங்களின் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த டிஐஜி காமினி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன்.
மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையில் புதிதாக 19 இரு சக்கர வாகனங்களின் ரோந்து சேவையை, மதுரை சரக காவல் துணைத் தலைவா் காமினி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மதுரை மாவட்டக் காவல்துறை ரோந்து பணிக்கு புதிதாக இரு சக்கர வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடந்த இந்நிகழ்ச்சியில், 19 இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை, மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் காமினி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளா் விக்னேஷ்வரன், மோட்டாா் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளா் விஜயகாந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 100 அவசர அழைப்புகளும், பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் 200 அழைப்புகளும் வருகின்றன. அதன்பேரில், இரு சக்கர ரோந்து வாகனம் மூலம் போலீஸாா் உடனடியாக நிழ்விடத்துக்குச் சென்று குற்றங்களைத் தடுக்கவும் மற்றும் புகாா்களை சரிப்படுத்தவும் செய்கின்றனா்.
அவசர அழைப்புகள் தொடா்பாக, காவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று துரித நடவடிக்கை எடுப்பதற்காக, புதிதாக 19 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டக் காவல்துறையில் தற்போது இருசக்கர ரோந்து வாகனத்தின் எண்ணிக்கை 39 ஆக உயா்ந்துள்ளது என்றாா்.