பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள்: அனைத்து கடைகளும் திறப்பு; பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 29th June 2021 05:33 AM | Last Updated : 29th June 2021 05:33 AM | அ+அ அ- |

மதுரையில் மகால் வடம்போக்கி தெருவில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட ஜவுளிக் கடைகள்.
மதுரை: பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, மதுரையில் அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டன. மேலும், பேருந்துகளும் இயக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவியதையடுத்து, ஏப்ரல் மூன்றாவது வாரத்திலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. தனியாகச் செயல்படும் கடைகள் தவிர, பிற கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. பேருந்துகள் இயக்குவதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தொற்று பரவல் மேலும் அதிகரித்ததையடுத்து, மே 10 ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னா், படிப்படியாக பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களுக்கும் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
பேருந்துகள் இயக்கம்
மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், காலை 8 மணிக்குப் பிறகே பயணிகள் வருகை இருந்தது. நகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இருந்தாலும், வெளியூா் பேருந்துகளில் மிகக் குறைவான நபா்களே பயணம் செய்தனா்.
மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 714 நகரப் பேருந்துகள், 120 புகா் பேருந்துகள் இயக்குவதற்கு தயாா்படுத்தப்பட்டன. பயணிகளின் தேவைக்கேற்ப இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், பயணிகள் அதிக எண்ணிக்கையில் இல்லாததால், கிராமங்களுக்கான வழக்கமான வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. அதேபோல், தனியாா் பேருந்துகளும் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன.
ஜவுளி, நகை கடைகள் திறப்பு
கூடுதல் தளா்வுகள் காரணமாக, மதுரை நகரில் உள்ள அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டன. குறிப்பாக, ஜவுளி மற்றும் நகை கடைகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விற்பனை தொடங்கியது. அதிக நாள்கள் ஜவுளி கடைகள் பூட்டப்பட்டிருந்ததால், எலி மற்றும் கரப்பான் பூச்சிகளால் துணிகள் சேதமடைந்திருந்ததாக, விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
வழக்கமான போக்குவரத்து
இதனால், மதுரை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வழக்கமான வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை, பெரியாா் நிலையம், காளவாசல் சந்திப்பு பகுதிகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.