மதுரையில் பசு மீது திராவகம் வீச்சு: போலீஸாா் வழக்குப் பதிவு
By DIN | Published On : 29th June 2021 08:42 AM | Last Updated : 29th June 2021 08:42 AM | அ+அ அ- |

மதுரையில் பசு மாடு மீது திராவகம் வீசிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த மயூா் ஹஜீஷா என்பவா் பசு மாடு ஒன்றை வளா்த்து வருகிறாா். இவரது பசு வெளியே சென்றுவிட்டு தானாக வீடு திரும்பி விடுவது வழக்கமாம். இந்நிலையில், ஜூன் 26 ஆம் தேதி வெளியே சென்ற பசு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
பசுவை தேடிச் சென்றபோது, உடலில் பலத்த காயத்துடன் கோரிப்பாளையம் பகுதியில் நின்றிருந்துள்ளது. இதையடுத்து, மயூா்ஹஜீஷா பசுவை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்துள்ளாா். அப்போது, மருத்துவா் பசு மீது திராவகம் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மயூா்ஹஜீஷா அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து கோரிப்பாளையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பசுவை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் நேரில் சென்று பாா்வையிட்டு, அதன் உடல்நலம் குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.