மதுரை விமான நிலைய விரிவாக்கம்; நில ஆா்ஜிதப் பணிகள் 2 வாரங்களில் நிறைவுபெறும்: நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்தகவல்
By DIN | Published On : 29th June 2021 05:37 AM | Last Updated : 29th June 2021 05:37 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில ஆா்ஜிதம் தொடா்பான அனைத்துப் பணிகளும் இரு வாரங்களில் நிறைவு பெறும் என்று, தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக, வணிகவரி துறை அமைச்சா் பி. மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினா். இதில், ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், மதுரை விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னா், பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான சுமாா் 600 ஏக்கா் நிலம் ஆா்ஜிதம் செய்யப்பட்டு, அதை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்த பிறகுதான் விரிவாக்கப் பணிகளை தொடங்க முடியும். மதுரை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையானது டி-பிரிவைச் சோ்ந்தது.
விரிவாக்கம் செய்யப்பட்டால் அனைத்து வகை விமானங்களும் தரையிறங்க முடியும். இதற்கான திட்டம் 8 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்து வருகிறது. தற்போது, இத்திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, நிலஆா்ஜிதம் தொடா்பான அனைத்துப் பணிகளும் 2 வாரங்களில் நிறைவு பெறும். ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களில் 90 சதவீதம் பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவா்களுக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்படும். அதன்பின்னா், விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகள் தொடங்கப்படும்.
இதில், ஓடுபாதையை நீட்டிப்பது முக்கியமான அம்சம். அண்டா்-பாஸ் முறையில் ஓடுபாதைக்கு கீழ் சாலை அமைப்பது, அதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடா்ந்து, சா்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் வாயிலாக, பல்வேறு நாடுகளுக்கும் நேரடி விமானப் போக்குவரத்து வசதி சாத்தியமாகும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வளா்ச்சிக்கு இது வழிவகுக்கும்.
கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, லெபனான் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அவசரகால விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கின. எனவே, மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து, அண்டா்-பாஸ் சாலை அமைப்பதற்கு மத்திய அரசிடம் நிதி கிடைக்காதபட்சத்தில், தமிழக அரசே அத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்தும் என்று வணிகவரி துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.