கமுதி பகுதியில் மணல் அள்ள தடைவிதித்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
By DIN | Published On : 04th March 2021 11:18 PM | Last Updated : 04th March 2021 11:18 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்திற்கு தவிர கமுதி பகுதியில் மணல் அள்ள தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பட்டா நிலங்களில் உபரி மணல் உள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டுமானப் பணிகளுக்கு இங்குள்ள உபரி மணல் எடுக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கியுள்ளாா். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே கமுதி பகுதியில் உபரி மணலை அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அரசு கட்டுமானப் பணிக்கு என அள்ளப்படும் மணல் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது எனவும், அதற்குரிய ரசீதுகள், புகைப்பட ஆதாரங்களை சமா்ப்பித்தனா். இதையடுத்து நீதிபதிகள், கமுதி பகுதியில் மணல் அள்ள தடைவிதித்து உத்தரவிட்டனா்.
அப்போது அரசுத் தரப்பில், மருத்துவக் கல்லூரி கட்டுமானத்திற்கு மட்டும் மணல் அள்ள அனுமதிகோரப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், மருத்துவக் கல்லூரி கட்டுமானத்திற்கு மட்டும் மணல் அள்ளப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G